பண்டைய பண்டிகையா ? பகட்டு பண்டிகையா ?
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எதற்கு இந்த தீபாவளி ? என்ன செய்கிறோம் நாம் ?
தீபாவளி என்பது ஏதோ ஒரு கேளிக்கை தினமாக மாறிவிட்டது. பலருக்கு எட்டு மணிக்கு எழுந்து, தொலைக்காட்சிகளில் "சின்ன திரையில் முதல் முதலாக" என்று திரைப்படங்களை பார்க்கும் நாளாக அது மாறிவிட்டது. மற்ற சிலருக்கோ தன் அபிமான கதாநாயகர்களின் படம் வரும் நாள். வேறு சிலருக்கோ, ஊர் அறிய உயர்ந்த விலை உடைகள் அணிந்து, சீனத்து பட்டாசுகள் கொண்டு பலரை உறைய வைக்கும் நாள். பல நடுத்தர வர்கத்தினருக்கு, அது பனப் பிரச்சினைகளை கொண்டு வரும் நாள். பல சிறுவர்கள் பக்கத்து வீட்டு பங்களாவின் பட்டாசு ஓசைகளை ஏக்கத்தோடு பார்க்கும் நாள். ஏன் தான் தீபாவளி வருகிறதோ என்று பலர் அங்கலாய்பதும் உண்டு.
ஆக மொத்தத்தில் தீபாவளி என்பது ஒரு பகட்டு பண்டிகையாக மாறிவிட்டது. அதன் ஆன்மீக அடிப்படைகள் அழிந்து போய், ஆர்பாட்டம் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது.
எத்தனை பேர் தீபாவளி அன்று விடிவதற்கு முன் நல்லென்னையில் குளிக்கிறார்கள் ? எத்தனை பேருக்கு தீபாவளி அன்று விடியும் வரை தங்கள் வீட்டு தண்ணீரில் கங்கை குடிவருகிறாள் என்று தெரியும் ? எத்தனை பேர் தீபாவளி அன்று விடிவதற்கு முன் கோவிலுக்கு செல்கிறார்கள் ? எத்தனை கோவில்கள் தீபாவளி அன்று விடிவதற்கு முன் திறக்கப்படுகின்றன ? விடிய விடிய தீபாவளி விடிந்து போனால் கோமாளி என்று சொல்வது எத்தனை உண்மை ? விடிந்த பிறகு நமக்கு (தெற்கில்) தீபாவளியே இல்லையே ?
தீபாவளியை நாம் விடிகாலை கொண்டாடுவோம். நம் பாரம்பரியத்தை புனரமைப்போம். விடிவதற்கு முன்னேயே பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். மத்தாப்புகளும், புஸ்வானமுமாக அனைவரின் வாழ்வும் பூக்கட்டும். வெடிகளை குறைப்போம், உள்ளூர் பட்டாசுகளை அவை எத்தனை பழமையானது என்றாலும் பயன் படுத்துவோம்.
முக்கியமாக அந்த பொன்னாளில் யாரேனும் ஒரு ஏழைக்காவது உதவுவோம். யாரேனும் ஒருவர் வாழ்விலாவது தீப ஒளியை ஏற்றுவோம்.
அப்போதுதான் தீமையை அழித்து நன்மையை கொண்டு வரும் இந்த நாளை நாம் நிஜமாகவே உயர்பெற செய்ய முடியும்.
No comments:
Post a Comment