Wednesday 26 March 2014

MANUAL-இல் படம் எடுப்பது எப்படி?

Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன்.
முதலில் ஆட்டோ மோடை விட்டு விட்டு Av,Tv,M ஆகிய மோட்களில் படம் பிடிப்பதால் என்ன பயன் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஆட்டோ மோடில் கேமரா தனக்கு ஏற்றார்போல் எல்லா அளவுகளையும் நிர்ணயித்துக்கொள்ளும் என்பதால் நமக்கு வேண்டியபடி படம் எடுக்க வேண்டும் என்றால் அது சரிப்பட்டு வராது.உதாரணத்திற்கு உங்கள் படத்தில் மிகக்குறைந்த DOF-உடன் (shallow Depth Of Field) உங்கள் கருப்பொருள் தனித்து நிற்பது போன்ற படம் வேண்டும் என்றால்,அதற்கு நீங்கள் உங்கள் லென்ஸின் அதிக பட்ச விட்ட அளவை உபயோகித்துக்கொள்ள விரும்புவீர்கள்.
Lesser f number = wider aperture = shallow DOF
குறைந்த f நம்பர் = அதிக லென்ஸ் விட்டம் = குறைவான குவிய ஆழம்
ஆனால் ஆட்டோ மோடில் படம் எடுத்தால் உங்கள் இஷ்டப்படி உங்களால் லென்ஸின் விட்டத்தை நிர்ணயித்துக்கொள்ள இயலாது!! இது போன்று, நீங்கள் படம் எடுக்கும்போது உங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் Av,Tv,M ஆகிய மோட்களில் படம் எடுக்க பழகிக்கொள்வது நல்லது.
இது கற்பதற்கும் சுலபம்தான்,கூடவே சுவாரஸ்யமான விஷயமும் கூட. சிலருக்கு Manual என்ற பெயரை கேட்டாலே சற்றே தலை சுற்ற ஆரம்பித்து விடும்! எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ,ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் முடிந்துவிடக்கூடிய விஷயத்திற்கு இவ்வளவு மெனக்கெடுவானேன் என்று விட்டு விடுவார்கள். இந்த பதிவை பார்த்து சற்றே நேரம் செலவழித்து முயன்று பாருங்களேன். சரிப்பட்டு வரவில்லை என்றால் திரும்பவும் ஆட்டோ மோடிற்கே சென்று விடலாம்.முயன்று பார்த்தால் தான் என்ன ?? இதை கற்றுக்கொண்டால் ஒரு விஷயத்தை புரிந்துக்கொண்டு செய்யும் திருப்தியாவது கிடைக்கும். 

சரி!! ஆரம்பிப்பதற்கு முன் நம்மிடம் தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாமா? முதலில் வேண்டியது ஒரு கேமரா! அதில் Av,Tv,Manual ஆகிய மோட்களில் படம் எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பின் உங்கள் கேமராவில் வெவ்வேறு அளவுகளை மாற்றிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்!! தெரியவில்லை என்றால் உங்கள் கேமராவின் செயல்குறிப்புப்புத்தகத்தை(operation manual) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அது இல்லையென்றால் இணையத்தில் தேடிப்பிடித்தாலும் சரிதான்.
அப்புறம் உங்களிடம் முக்காலி(ட்ரைபாட்) இருந்தால் ஷட்டர் வேகம் குறைவாக உள்ள படங்கள் எடுக்க வசதியாக இருக்கும். அது இல்லையேல் உங்கள் கேமராவை ஏதாவது தட்டையான மற்றும் கடினமான ஒரு பரப்பில் இருத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேமராவை பொருத்தும் இடம் உங்கள் கருப்பொருளை படம் பிடிக்க வாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டதா??? சரி இப்போ Manual-இல் படம் எடுக்கலாம் வாங்க.
முதலில் நாம் எடுக்கப்போவது Av மோடில்! லென்ஸின் விட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ள அதற்கேற்ப ஷட்டரின் வேகத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும். முதலில் இந்த படப்பிடிப்புக்கு தேவையான கருப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது என்ன தனியா தேர்ந்தெடுத்துக்கிட்டு?? ஏதோ கண்ணுல மாட்டுனத கப்புனு புடிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேக்கறீங்களா?? நம்மளோட இன்றைய பாடத்தின் பலனை சுலபமாக புரிந்துக்கொள்ள DOF நிறையவே மாறுபடும் கருப்பொருள் கிடைத்தால் நன்று.
அதாவது உங்கள் கருப்பொருளின் முன்னாலேயும் பின்னாலேயும் பொருட்கள் இருந்தால் ,லென்ஸ் விட்டத்தின் மாறுபாடுகளினால், அவற்றின் மேல் கேமராவின் ஃபோகஸ் எந்த அளவு மாறுபடுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மேஜையின் மேல் மூன்று பொருட்கள் இருப்பது போன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் அந்த பொருட்களில் நடுவில் உள்ள பொருள் மட்டும் தெளிவாக தெரிவது போல ஒரு படம் ,அந்த பொருட்கள் மூன்றுமே தெளிவாக உள்ளது போன்ற படம் என்று மாற்றி மாற்றி எடுத்து லென்ஸ் விட்டத்தின் மகத்துவத்தை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
undefinedசரி! உங்கள் கருப்பொருளை முடிவு செய்துக்கொண்ட பின்,உங்கள் கேமராவை அதற்கேற்ப பொருத்திவிட்டு,கேமராவின் மோடை Av-கு மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் லென்ஸின் விட்டத்தை முடிந்தவரை பெரிதான அளவிற்கு செட் செய்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு லென்ஸின் அதிகபட்ச விட்ட அளவு அந்தந்த லென்ஸின் மேலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். என்னுடைய கிட் லென்ஸில் அதிகபட்ச விட்ட அளவு f5.6. உங்கள் லென்ஸின் குறைந்தபட்ச எஃப் நம்பர் லென்ஸின் அதிகபட்ச விட்டத்தின் அளவுகோல் என்பதை மறக்க வேண்டாம். இப்பொழுது உங்கள் ஷட்டரை லேசாக அழுத்துங்கள்! உங்கள் கருப்பொருளின் மேல் ஃபோகஸ் செட் ஆகி விடும்.நீங்கள் வைத்திருக்கும் முன்று பொருட்களில் நடுவில் உள்ள பொருளின் மீது உங்கள் கேமராவின் ஃபோகஸ் செட் ஆகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் காட்சியின் ஒளியமைப்புக்கு ஏற்றார்போல், உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை தீர்மானித்துக்கொள்ளும்.

No comments:

Post a Comment