Saturday 12 January 2013

5 செமீ உயர திருக்குறள் புத்தகம் – இந்திய இளைஞன் சாதனை!




திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தண்டரை கால்வாய் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதாகும் பி.ஜெயபிரகாஷ். பட்டதாரியான இவர், அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வமுள்ளவர். கின்னஸ் சாதனைக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். உலக நாடுகளின் வரைபடங்களை துணி நூலால் வரைந்திருக்கிறார்.

மேலும், அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம், திருவாசகம், ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள் உட்பட 6 புத்தங்களையும் கண்ணாடி பிம்ப எழுத்துக்களால் உருவாக்கியிருக்கிறார். முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் மட்டுமே இவர் எழுதியுள்ளதை படிக்க முடியும். இந்நிலையில், கின்னஸ் சாதனை முயற்சியின் அடுத்த கட்டமாக, 1,330 திருக்குறள்களையும் 5 செ.மீ உயரம், 4 செ.மீ அகலம் கொண்ட சிறிய புத்தகத்தில் கண்ணாடி பிம்ப எழுத்துக்களால் எழுதியுள்ளார். லென்ஸ் கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்கக் கூடிய மிகச்சிறிய அளவில் எழுத்துக்கள் அமைந்துள்ளன.

இது குறித்து ஜெயபிரகாஷ் கூறுகையில்…

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எழுத்துக்கள் கண்ணாடியில் எவ்வாறு தலைகீழாக பிரதிபலிக்குமோ, அதைப்போல நான் நேரடியாக எழுதிப் பழகினேன்.

தற்போது, சரளமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கண்ணாடி பிம்ப எழுத்துக்களை எழுத முடிகிறது. 3 மாத முயற்சியில் மிகச்சிறிய திருக்குறள் புத்தகத்தை உருவாக்கி உள்ளேன். இதைத்தொடர்ந்து, ஆங்கிலத்தில் திருக்குறள் புத்தகத்தை கண்ணாடி பிம்ப எழுத்துக்களில் எழுத இருக்கிறேன்.
என்றார்.

No comments:

Post a Comment