Tuesday 20 August 2013

புகைப்படக் கருவியை தெரிவுசெய்தல் - 1

புகைப்படம் என்றவுடன் எல்லோரும் முதலில் கேட்பது "நீ எந்த கமெரா வைத்திருக்கிறாய்?" என்பதுதான். சிறந்த புகைப்படம் எடுக்க மிகவும் தரமுயர்ந்த, விலை அதிகமுள்ள கமெரா தேவை என்ற தப்பான அபிப்பிராயம் எம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் நானும் அதுபோன்றே எண்ணியிருந்தேன். ஆனால்  படிப்படியாக கமெராவை எப்படி பாவிப்பது பற்றிய சில நுணுக்கங்கள் தெரியவர, சாதாரண கமெராவினாலும் தரமான புகைப்படம் எடுக்கலாம் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்.


ஆம், உங்களிடம் ஏற்கனேவே ஒரு கமெரா உள்ளதா? அப்படியானால் முதலிலே அதனைப் பாவித்து அதன் மூலம் முடிந்த அளவிற்கு சிறந்த புகைப்படம் எடுக்க முயற்சி செய்யுங்கள். அதன் செயல்முறை விளக்க புத்தகத்தை (manual) வாசித்து கமெராவின் முழு உபயோகத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.


ஒரு சிறந்த புகைப்படத்தை எடுப்பதில் கமெரா அடிப்படைக் காரணியாக உள்ளபோதிலும், புகைப்படத்தை எடுப்பவரே ஒரு புகைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றார். சிறந்த கற்பனை வளம், ஒளியைக் கையாளும் திறன் படைத்த ஒருவரால் சாதாரண கைத்தொலைபேசி கமெராவினால் (cellphone camera) கூட சிறந்த புகைப்படங்களை எடுக்கமுடியும்.

சரி, அப்படியாயின் எதற்காக புகைப்பட கருவியை தெரிவுசெய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?  புகைப்படக்கலையை புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கும்,      அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை படம் பிடிக்கவும் சாதாரண கமெரா போதுமானது. ஆனால் புகைப்படக்கலையின் நுணுக்கங்களை கற்று சிறந்த புகைப்பட கலைஞராக வரவேண்டும் என்ற அவா உள்ளவர்கள் தமது கமெராவை தெரிவு செய்வதில் மிக அவதானமாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment