Friday 23 August 2013

Histogram

படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே மேலோட்டமாக பார்த்துவிட்டு விட்டிருப்போம். ஆனால் இன்றைக்கு இவைகளை பற்றி என்னவென்று பார்த்துவிடுவோம் வாருங்கள்.

இந்த பட்டை வரைப்படம் உங்கள் படத்தில் உள்ள வெளிச்சம்,மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளின் வரைபடம் என்று கொள்ளலாம். இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு போக போக இருட்டிலிருந்து வெளிச்சப்புள்ளிகளின் அளவை பொருத்து கோடுகள் உயரமாகவோ,உயரம் குறைந்தோ காணப்படும்.இதன் ஒரு முக்கியமான உபயோகம் என்னவென்றால்,உங்கள் கேமராவின் LCD திரையில் படம் ஒழுங்காக வந்திருக்கிறதா என்பதை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும்,படம் அதிக ஒளியினால் வெளிரிப்போயுள்ளதா,அல்லது வெளிச்சம் குறைந்து இருட்டிவிட்டதா என்பதை இந்த தட்டைப்படத்தை கொண்டு அனுமானித்துக்கொள்ளலாம்.
சில உதாரணங்களை பார்க்கலாமா??

கீழே உள்ள படத்தினையும் அதற்கான தட்டைப்படத்தினையும் பாருங்கள்கீழே இருக்கும் படத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் சற்றே வலது புறத்தில் உயரமான கோடுகள் இருப்பதை பார்க்கலாம்.இதனால் படம் சிறிது over exposed ஆகி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்துக்கொள்ளலாம்.


இப்பொழுது கீழே இருக்கும் படத்தையும் அதற்கான தட்டை வரைபடத்தையும் பாருங்கள்.இந்த படத்தில் குழந்தை கருப்பு வண்ணத்தில் சட்டை அனிந்திருப்பதாலும்,படம் சற்றே வெளிச்சம் குறைந்து காணப்பட்டிருபதாலும் தட்டை வரைப்படத்தில் இடது புறம் கோடுகள் உயர்ந்து காணப்படுகின்றன.


இப்பொழுது எந்த ஒரு பக்கமும் தனியாக உயர்ந்து நிற்காமல் சீராக பரவி இருக்கும் ஒரு தட்டை வரைபடத்தையும்,அதற்கான படத்தையும் கீழே பாருங்கள்.இடது பக்கம்,வலது பக்கம் என்றில்லாமல் எப்படி ஒரே சீராக (ஓரளவிற்கு) கோடுகள் எல்லா பக்கமும் இருக்கிறது என்று பாருங்கள்.

புகைப்படக்கலையின் மற்ற பாடங்களை போல் இதுவும் நாம் நல்ல புகைப்படம் எடுப்பதற்கான ஒரு கருவி மட்டுமே. தட்டை வரைப்படம் ஒரே சீராக பரவி இருந்தால்தான் நல்ல படம் என்றோ,அப்படி இல்லாமல் இருந்தால் நல்ல படம் இல்லை என்றோ யாராலும் சொல்ல முடியாது.ஆனால் அடுத்த முறை எங்கேயாவது தட்டை வரைப்படம் பார்த்தால் பேந்த பேந்த முழிக்காமல்,அது என்ன,அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றாவது புரிந்துக்கொள்ள இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்

No comments:

Post a Comment