Sunday, 25 August 2013

கண்ணிலே கலைவண்ணம் கண்டார்!

கண்ணிலே கலைவண்ணம் கண்டார்!


ன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணங்களும் எவ்வளவு உயிர்ப்பானவை? ஆனால், நமக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் நாம் அதைக் கவனிப்பதே இல்லை. அதுவே புகைப்படமாகப் பார்த்தால், அது மனதைவிட்டு மறைவதே இல்லை.
தாங்கள் எடுக்கும் படங்களின் மூலம் செய்திகளுக்கு வலு சேர்ப்பவர்கள் புகைப்படக்காரர்கள். 'ஆர்ட் ஹவுஸ்’ என்ற அமைப்பு, பத்திரிகைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்களைக்கொண்டு புகைப்பட கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எளிமையான மனிதர்களின் எளிய வாழ்க்கை, ஏழைகளின் சோகம் என விளிம்பு நிலை மக்களின் விதவிதமான வாழ்க்கையைப் பிரதிபலித்தது அந்தப் புகைப்படக் கண்காட்சி. போயஸ் கார்டன் அருகே உள்ள, ஆர்ட் ஹவுஸில் நடந்த அந்தக் கண்காட்சிக்குப் போயிருந்தேன்.
கண்காட்சியை ஒருங்கிணைத்த ஆர்ட் ஹவுஸ் அமைப்பாளர்கள், '' பொதுவாகச் செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் போட்டோகிராஃபர்கள் கிரியேட்டிவ் கலைஞர்களைவிட ரசனையானவர்கள். இங்கிருக்கும் அவர்கள் எடுத்த படங்களைப் பார்த்தாலே அது புரியும். மற்ற புகைப்படக்காரர்களைப்போல முறையான ஸ்டுடியோ, லைட்டிங் கருவிகள் என எதுவும் இல்லாமலேயே ஸ்பாட்டில் கலக்குவார்கள். அதை மக்களுக்கு உணரவைக்கத்தான் இந்தப் புதிய முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்'' என்றார். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஈநாடு போன்ற பல நாளிதழ்களைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் இதில் தங்களின் படைப்புகளைக் காட்சிக்குவைத்திருந்தார்கள். இது தவிர கார்ட்டூன்கள், ஆவணப்படக் காட்சி, செரிகிராஃபி போன்ற மாடர்ன் ஆர்ட் வகைகள் என்று எல்லாம் சேர்ந்து பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
தன் மகளை சிமென்ட் கலவை சுமக்கும் தட்டில்வைத்துத் தலைமேல் ஏந்திச் செல்லும் சித்தாள் பணிப்பெண், மனிதர்களே தோற்று விடும் அளவுக்கு எனர்ஜெடிக் போஸ் கொடுத்து சிரிக்கும் குரங்குகள், சிவப்பு நிறப் பின்னணியில் கருப்பு நிழலுருவங்களாய் பேசிக்கொள்ளும் கருணாநிதியும் கனிமொழியும், மீன்கார ஆயா, சீறிப்பாயும் அலங்காநல்லூர் காளை, கான்வென்ட் சிறுவர்கள் பக்கத்திலேயே குழந்தைத் தொழிலாளர், தெரு முழுக்கப் பொங்கல் கோலங்கள் என்று ஒவ்வொரு புகைப்படமும் எதார்த்தங்களின் எடுத்துக்காட்டு.
ஆயிரம் அர்த்தங்களைத் தன்னகத்தே பொதிந்துவைத்துப் பல படங்கள் இருந்தாலும் கருகிய தன் குடிசை வீட்டிலிருக்கும் சட்டியில் பசி மிகுந்த கண்களோடு உணவைத் தேடும் ஒரு சிறுவனது படமும்  தன் குழந்தைக்குக் கொடுக்கப் பாலின்றி சுருங்கி, சிறுத்துப் போய்விட்ட மார்பு தெரிய பிணமாய் ஒரு  தாய் வீழ்ந்து கிடக்கும் காட்சியும் ஆன்மாவை உலுக்கி எடுத்துவிட்டது!

No comments:

Post a Comment