Sunday, 25 August 2013

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும்

சிறந்த புகைப்படங்களை நினைவு கூர்வது கூட அந்நாளை கொண்டாடுவதற்கு ஈடாகும்.
பேனா முனை வாள் முனையை விட கூர்மையானது என்று சொல்வர். வலிமையான எழுத்துக்கள் சமுதாய புரட்சியை ஏற்படுத்தி விட முடியும் என்பதால் தான். அதற்கு நிகராகவே வலிமையானது புகைப்படமும்.
ஒரு புகைப்படம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டிருந்த ஒரு போர் நிறுத்தத்திற்கு காரணமாக இருக்கும் அளவிற்கு வலிமையானதா என்றால்? ஆம் என்கிறது வரலாற்றுப் பக்கங்கள்.
காலச்சுவடு.....
ஜூன் 8, 1972 டிராங் பாங் என்ற இடத்தில் தெற்கு வியட்நாம் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. விண்ணைப் பிளந்து கொண்டு வந்த குண்டுகள் நெருப்பைக் கக்கியது. அதில் 9 வயது சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டார். போர் நெருப்பு உடல் முழுவதும் பற்றிக் கொள்ள ஆடைகளை கழற்றி எரிந்து விட்டு உயிர் மட்டுமாவது மிஞ்சட்டும் என்று (Nóng quá, nóng quá அந்நாட்டு மொழியில் ("அதிக சூடு, அதிக சூடு") என்று பொருள்) கதறி துடித்தபடி நிர்வாணமாக ஓடி வந்தார் ஒரு சிறுமி. அவர் பெயர் கிம் புக் (Khim Phuc).
அந்தச் சிறுமியின் வேதனையை,போரின் கொடுமையை... அப்படியே தனது கேமராவில் பதிவு செய்தார் அப்போது களத்தில் இருந்த அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர் நிக் உட். பின்னர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். பேசும் படமாக இருந்த அவரது புகைப்படத்தை பிரசுரிக்க முதலில் தயக்கம் காட்டியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. சிறுமியின் நிர்வாணக் கோலம் தயக்கத்தை ஏற்படுத்தியதாம். ஆனால் அந்த கோலம் தான் போரின் வேதனையை பட்டவர்த்தமாக பறைசாற்றும் என்பதால் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் , முதல் பக்கத்திலேயே அந்த படத்தை பிரசுரித்தது. அந்த புகைப்படம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
Girl in the picture என்று பெயரிடப்பட்ட அந்தப் புகைப்படத்திற்கு 1972ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றது.
முகம் தெரியாத டேங்க் மேன்.....
இதே போல் 1989 ஆம் ஆண்டு ஜூன் 5ம் தேதி, சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த பீரங்கிகளை இளைஞர் ஒருவர் வழிமறிக்கும் காட்சியடங்கிய புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியான போது மிகவும் பிரபலமடைந்தது.
 
டேங்க் மேன் (Tank Man) என்று முகம் தெரியாத அந்த நபருக்கு பெயர் சூட்டப்ட்டது. பின்நாளில் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
லிட்டில் பாய்......
இரண்டாம் உலகப் போர்- உடனே நம் கண்கள் முன் வந்து செல்வது என்னவோ ஹிரோஷிமா, நாகசாகி தான். அமெரிக்கா நடத்திய அணுகுண்டு கோர தாக்குதல் சம்பவம் அது. லிட்டில் பாய் ஏதோ செல்லப் பெயர் போல் இருந்தாலும் அந்த அணுகுண்டு நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான உயிர்களை விழுங்கியது.
 
 
லிட்டில் பாய், ஃபேட் மேன் ன்ற இரண்டு அணுகுண்டுகளும் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை உருக்குலைத்த காட்சிகள் கல் மனதையும் கரைய வைக்கும். இன்றளவும் அணுசக்திக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களின் கைகளில் பதாகைகளாக இருக்கின்றன.
விடியாத இரவு........
1983ம் ஆண்டு, மத்தியபிரசேத்தின் தலைநகர் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சையனைட் நச்சு வாயு கசிந்தது.
 
சுமார் 15,000 பேர் விஷவாயுவின் வீரியத்திற்குப் பலியானார்கள். விடியாத இரவாக மாறிய அந்த கோர விபத்தின் வீரியத்தை விஷவாயு தாக்குதலில் பலியான ஒரு குழந்தையின் படம் ஒன்று போதும் விளக்கிக் கூற.
2002 குஜராத் கலவரம்....
போர்க்களமாகவே மாறியிருந்தது காந்தி பிறந்த பூமி. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் போல், அகமதாபாத்தில் டெய்லராக இருந்த இளைஞர் குதுப்தீன் அன்சாரியும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை தன் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து வரும் என்று. கலவரக்காரர்களால்வீடு தீக்கிரையாக்கப்பட்டு, தானும் தாக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் நின்றிருந்தார் அன்சாரி. செய்வதறியாது நின்றிருந்த அவர், அவ்வழியாக வந்த காவல்துறையினரிடம் உதவி கோரினார். அப்போது அங்கே இருந்த ராய்டர்ஸ் புகைப்படக்காரர் அர்கோ தத்தா, தன் கேமராவுக்குள் அன்சாரியை பதிவு செய்தார்.

அடுத்த நாள் உலம் முழுவதும் செய்தித்தாள்களில் அன்சாரியின் புகைப்படம் வெளியானது. "the defining image of the Gujarat carnage" இப்படித்தான் அந்த புகைப்படம் உலகம் முழுவதும் அழைக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில், அன்சாரியின் கண்களில் தெரிந்த பீதி, இயலாமை, கைகள் கூப்பி அவர் கெஞ்சிய நிலை யாராலும் மறக்க முடியாது.
இப்படி சமுதாயத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்திய புகைப்படக்காரர்களின் திறமையை நாம் என்று மதிப்போம். சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதல் கேமரா:
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் ஆகஸ்டு 19ம் தேதி உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
 
ஆரம்ப காலத்தில் பெரிய பெட்டி மாதிரி இருந்த ஸ்டில் கேமரா இன்று கையடக்க டிஜிட்டல் கேமராவாக உருமாறியிருக்கிறது. இன்று புகைப்படம் எடுப்பது என்பது மிகவும் சாதாரணம் என்ற நிலைக்கு வந்து விட்டது. 5 வயது குழந்தையிடம் கேமராவை கொடுத்தால் கூட, தெளிவான புகைப்படங்களை எடுக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. பிலிம் ரோல்கள் வாங்கி புகைப்படம் எடுத்த காலம் மாறி, எவ்வித செலவும் இல்லாமல், கையில் உள்ள மொபைல் போன்களில் எளிதாக படம் எடுக்கும் வகையில் இக்கலை பரவலாகிவிட்டது.

No comments:

Post a Comment